கோலாலம்பூர், அக்டோபர் 24-
கடந்த திங்கட்கிழமை, பேரா, ஈப்போ சுற்றுப்புறப்பகுதியில் ஏற்பட்ட வெடிச்சத்தம் மற்றும் அதிர்வுகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வரும் வேளையில் இதுவரை அவை ஏன் ஏற்பட்டன என்பதற்கான காரணம் இன்னும் மர்மமாக உள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிசத்தமும், நில அதிர்வும் ஈப்போ மட்டுமின்றி கோபெங், குவாலா கங்சார், கெரிக் சுற்றுப்பகுதிகளிலும் உணரப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது என்று ஐஜிபி குறிப்பிட்டார்.
பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் யாரும் தேவையற்ற ஆருடங்களை கூற வேண்டாம் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் அறிவுறுத்தினார்.
அரச மலேசிய ஆகாயப்படை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தங்களின் SONIC ராணுவப் போர் விமானங்கள் காரணமாக இந்த சத்தமும் அதிர்வும் ஏற்படவில்லை என்று விளக்கியுள்ளது.
அதேவேளையில் ஈப்போ வான் போக்குவரத்துப்பாதையில் வெளிநாட்டுப் போர் விமானங்கள் பறக்கவில்லை என்பதையும் அது தெளிவுபடுத்தியுள்ளது.