ஜொகூர், அக்டோபர் 24-
ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி- யில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி 59 வயதுடைய அந்த உள்ளூர் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு 2 கோடி வெள்ளி பிணைப்பணம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த வர்த்தகரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் இன்று ஜோகூர்பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த மூன்று நபர்களையும் இன்று தொடங்கி 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றனர்.
30 வயது மதிக்க அந்த மூன்று நபர்கள், நேற்று அதிகாலையில் பத்து பஹாட்- டில் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆடவர்களும், ஒரு பெண்ணும் அந்த வர்த்தகரை கடத்துவதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.
அந்த வர்த்தகர் காலை 5 மணியளவில் வெளிநாட்டிற்கு புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு செல்ல கிரேப் வாகனத்திற்கு காத்திருந்த வேளையில் சில ஆடவர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்றினால் கடத்திச்செல்லப்பட்டதாக China Press செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த கடத்தல் தொடர்பில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ குமார் முத்துவேல் நேற்று தெரிவித்து இருந்தார்