கோலாலம்பூர், அக்டோபர் 24-
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்கும், அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் நான்கு பெண்களிடம் கொள்ளையடித்ததாக ஆடவர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
30 வயது M. தனபாலன் என்ற அந்த நபர், நீதிபதி Egusra Ali முன்னிலையில் நிறுத்தப்பட்டு அந்த நபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த நபர், ஆகக்கடைசியாக கடந்த அக்டேபார் 7 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் கோலாலம்பூர்,Brickfields, Bangsar, Jalan Limau- வில் தனது காரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த 78 வயது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் இடித்து தள்ளி, கைப்பையை பறித்துக்கொண்டு, அந்த மூதாட்டியை தரதரவென்று இழுத்துச்சென்று கடுங்காயத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி காலை 7.40 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ், Bank Rakyat அருகில் Nurfarah Hazwani Ahmad Zaidi என்ற 29 வயது மாதுவை கீழே தள்ளி 3,500 வெள்ளி ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக தனபாலன் மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுடள்ளது.
கடந்த அக்டோபர் 7 ஆம் காலை 6.15 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் முன்புறம் 20 வயது இளம் பெண் Rebecca Matthews என்பவரை கீழே தள்ளி, iPad, கிரேடிட்கார்டு மற்றும் ரொக்கப்பணம் உட்பட சுமார் மூவாயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றதாக தனபாலன் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த மார் 18 ஆம் தேதி காலை 6.50 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ், ஒரு Condominimun அருகில் ஒரு கொரியப் பெண்ணான lee Hyeonjoo என்பவரை மடக்கி 885 வெள்ளி ரொக்கத்தை தனபாலன் கொள்ளையிட்டுச் சென்றதாக நான்காவது குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 392 பிரிவின் கீழ் தனபாலன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கொள்ளையில் ஈடுபட்டதற்காக தனபாலனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது.