புக்கிட் பிளாண்டோக் பகுதியில் ரசாயன கழிவுகள் வீசப்பட்ட பகுதியை சுத்தம் செய்ய ஒப்புதல்

போர்ட்டிக்சன்,அக்டோபர் 25-

போர்ட்டிக்சன், புக்கிட் பிளாண்டோக் பகுதியில், பொறுப்பற்ற நபர்களால் கொட்டப்பட்ட சாயம், எண்ணெய்க் கழிவுகளை உள்ளடக்கிய ரசாயனக் கழிவுகள், கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி கண்டு பிடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியை தூய்மைப்படுத்துதற்கு நில உரிமையாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ரசாயனக்கழிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்குப் பின்னர் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு சுற்றுச்சூழல் இலாகா மற்றும் நில உரிமையாளருடன் நேற்று அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு சந்திப்பு நடத்தப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில மனித வளம், பருவநிலைமாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் தெரிவித்தார்

இதன் பலனாக சம்பந்தப்பட்ட பகுதியை சுத்தம் செய்வதற்கு நில உரிமையாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்ட அப்பகுதியை சுத்தம் செய்வதற்கும், சட்டவிரோதமாக கொண்டப்பட்ட ரசாயன கழிவுகளை பாதுகாப்பான ஓர் இடத்தில் அப்புறப்படுத்துதற்கும் நில உரிமையாளர் ஒப்புக்கெண்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வீரப்பன் குறிப்பிட்டார்.

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் 100 லிட்டர் கொள்ளளவைக் கொண்ட 70 முதல் 100 பீப்பாய்களும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவைக்கொண்ட கிட்டத்தட்ட 50 கொள்கலன்களும் கண்டு பிடிக்கப்பட்டதையும் வீரப்பன் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலனை புறக்கணிக்கும் தரப்பினருக்கு படிப்பிணையை உணர்த்தும் வகையில் இத்தகைய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

இதன் தொடர்பில் நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் இலாகா மற்றும் போர்ட்டிக்சன் நகராண்மைக்கழகம் உட்பட அமலாக்கத் தரப்பினர், இது போன்ற மாசுபாட்டிற்கு எதிராக தனது புலன் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று வீரப்பன் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS