கோலாலம்பூர், அக்டோபர் 25-
சிறைக்கைதிகளை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பரிந்துரைக்கப்படும் சட்டத்திருத்த மசோதாவானது, முதல் முறையாக தண்டிக்கப்படும் குற்றவாளிக்கு அரசாங்கம் வழங்கும் ஒரு வாய்ப்பாகும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.
எனினும் சிறைக்கைதிகளை வீட்டுக்காவலில் வைக்கும் பரிந்துரையானது, முன்னாள் பிரதமர் ஒருவருடன் தொடர்புப்படுத்தி வியாக்கியாணம் செய்து வருவது மிக அபத்தமாகும் என்று அமைச்சர் விளக்கினார்.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த சட்டத்திருத்த மசோதா மீதான பரிந்துரை குறித்து கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வியக்கியாணம் செய்வதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் உரிமையுண்டு. ஆனால், அரசாங்கத்தின் உண்யைமான நோக்கம் அவர்களுக்கு தெரியாது என்று சைபுடின் குறிப்பிட்டார்.
பேங்காடி மையத்தில் பால்மாவு திருடி, தண்டனை விதிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட ஒரு ஏழைத்தாய்க்கு நேர்ந்த கதியைப் போல் முதல் முறையாக குற்றம் இழைத்து தண்டிக்கப்பட்டவர்கள் திருந்துதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.
அத்தகைய குற்றவாளிகளை இரும்புக்கம்பி அறைக்குள் தடுத்து வைத்து தண்டிப்பதற்கு பதிலாக அவர்களை வீட்டுக்காவலில் வைத்து, திருத்துவதற்கு ஓர் இரண்டாவது வாய்ப்பாக இந்த உத்தேசத் சட்டத் திருத்த மசோதா வரையப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.