நஜீப் மன்னிப்பை நாம் ஏற்றுக்கொண்டால் மக்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்

கோலாலம்பூர், அக்டோபர் 26-

1MDB நிறுவனத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மன்னிப்பை நாம் ஏற்றுக்கொண்டால், மக்கள் / நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் என்று தாம் அச்சப்படுவதாக DAP ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மிகப்பெரிய ஊழலுக்கு வித்திட்ட 1MDB நிதி மோசடி ஊழல் தொடர்பில் நஜீப் மக்களிடம் கோரிய பகிரங்க மன்னிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்றுக்கொண்டுள்ளார். இது பிரதமரின் பெரும்தன்மையைக் காட்டுகிறது.

ஆனால், இவ்வளவு கஷ்டங்களையும், இன்னல்களையும் கடந்துள்ள அன்வாரின் இடத்தில் நஜீப் இருந்து இருப்பாரோயானல், இதேபோன்ற மன்னிக்கும் மனப்பான்மையை காட்டுவாரா என்று ராயர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், நஜீப் விவகாரத்தில் ஆகக்கடைசியாக நடந்து கொண்டு இருக்கும் நிலவரங்களை பார்க்கும் போது தமக்கு அச்ச உணர்வு மேலோங்கியிருப்பதாக ராயர் குறிப்பிட்டார்.

காரணம், அன்வார் தலைமையில் ஓர் அரசாங்கத்தை நிறுவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியதாயிற்று. அந்த வகையில் டத்தோஸ்ரீ அன்வார் தொடர்ந்த பல தவணைக்காலம் இந்த நாட்டிற்கு தலைமையேற்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக ராயர் தெரிவித்தார்.

தற்போது தமது கவலையெல்லாம், நாட்டின் நீடித்த வீழ்ச்சிக்கும், மலேசியாவின் பிரதான நாணயமான ரிங்கிட்டின் தொடர் சரிவுக்கும், அரசியல் நிலைத்தன்மையற்ற சூழலுக்கும், மக்களின் பெரும் சிரமத்திற்கும், வாழ்க்கைச் செலவின உயர்வுக்கும் முக்கிய காரணங்களில் 1MDB ஊழலும் முக்கிய காரணமாகும்.

நாடு சரிவர நிர்வகிக்கப்படாததால், ஒரு மாற்று அரசாங்கத்தை தேர்வு செய்யும் அளவிற்கு மக்கள் 2018 ஆம் ஆண்டு ஒரு விவேகமான முடிவின் வாயிலாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் நஜீப்பின் மன்னிப்பை நாம் ஏற்றுக்கொண்டால், மக்கள் நிச்சயம் நம்மை மன்னிக்க மாட்டார்கள் என்ற அச்சம் தற்போது தமக்கு மேலோங்கியிருப்பதாக ராயர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS