பினாங்கு,அக்டோபர் 26-
தீபாவளி திருநாள் இந்தியச் சமூகம் கொண்டாடும் பண்டிகையாக இருந்த போதிலும் இருளை அகற்றி ஒளியை வரவழைக்கும் அதன் முக்கியத்துவமானது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும் வகையில் பினாங்கு, Bagan Dalam சட்டமன்றத் தொகுதியில் அதன் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் முன்னலையில் தீபாவளி அலங்கார விளக்குகளை பொருத்தும் அதன் ஒளியூட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

டிஏபி பொதுச் செயலாளரும் Bagan நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், அதிகாரப்பூர்வமாக இந்த ஒளியூட்டு விழாவைத் தொடக்கி வைத்தார்.
Bagan Dalam சட்டமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் Bagan Dalam,டத்தோ ஹாஜி அகமது படாவி திடலில் திறந்த வெளியில் நேற்றிரவு நடந்தேறிய தீபாவளி ஒளியூட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக லிம் குவான் எங்குடன், ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பாகன் ஜெர்மல் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன், செபராங் பேராய் மாநகர் மன்ற உறுப்பினர்களான லிங்கேஸ்வரன் சார்மர், இங் யீ சியாங், சோங் வெய் ஹூங் ஆகியோருடன் இயக்கப்பொறுப்பாளர்களும், பொது மக்களும் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர்.

எங்கும் கண்ணைக்கவரும் ஒளிவெள்ளம் என்று சொல்லும் அளவிற்கு டத்தோ ஹாஜி அகமது படாவி திடலே அலங்கார விளக்குகளினால் மின்னும் பூஞ்சோலையைப் போல் தோற்றம் அளித்தது, பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்த ஒளியூட்டு விழா, ஒரு லிட்டில் இந்தியா தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐந்து அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு, நிகழ்விற்கு மெருகூட்டப்பட்டதாக Bagan Dalam சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தமது உரையில் குறிப்பிட்டார்.

இது தீபாவளியை வரவேற்கும் நிகழ்வு என்றாலும் ஓரிட மக்களின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விதைக்கும் ஓர் அடையாள நிகழ்வாக விளங்குகிறது என்று குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த ஒளியூட்டும் விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்து, நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த லிம் குவான் எங்கிற்கும், இதர பிரமுகர்களுக்கும், வருகையாளர்களுக்கும் குமரன் கிருஷ்ணன் தமது நன்றியை பதிவு செய்தார்.
