PLKN தேசிய சேவை பயிற்சித்திட்டம் 3.0 அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது

அலோர் கஜா, அக்டோபர் 26-

இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை விதைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய சேவைத் திட்டமான PLKN 3.0, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் தொடங்குகிறது என்று தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முடக்கப்பட்ட PLKN சேவைத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தொடக்க கட்டமாக கோலாலம்பூரில் உள்ள இரண்டு இராணுவ முகாம்களில் 17 வயதுக்கு மேற்பட்ட சுமார் 500 இளையோர்கள் பங்கேற்பார்கள் என்று தற்காப்புத்துறை துணை அமைச்சர் அட்லி ஜஹாரி தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 13 PLKN முகாம்களில் தேசிய சேவைத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான முழு அமலாக்கம், வரும் 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பதின்ம வயதுடைய இளையோர்கள் மத்தியில் தேசப்பற்றையும், கட்டொழுங்கையும் விதைக்க வகை செய்யும் தேசிய சேவைத் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அதிகரித்து செலவினம் காரணமாக இத்திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுமையாக முடக்கப்பட்டது.

இளையோர்கள் மத்தியில் தேசப்பற்றை விதைத்து, நாட்டின் பாதுகாப்பின் அவசியம் குறித்து ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொண்டு, அதில் தமது ஈடுபாட்டையும், பங்களிப்பையும் காட்டுவதற்கு தேசிய சேவைத் திட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று துணை அமைச்சர் அட்லி ஜஹாரி தெரிவித்தார்

WATCH OUR LATEST NEWS