செகிஞ்சன்,அக்டோபர் 26-
கோலசிலாங்கூர் செகிஞ்சன் அருகில், ஜாலான் கோலா சிலாங்கூர் – தெலுக் இந்தான் சாலையில் இன்று அதிகாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தபட்ட சாலை விபத்தில் எட்டு பேர் காயமுற்றனர். இருவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெரும் அவதிக்கு ஆளாகினர்.
இவ்விபத்து தொடர்பில் அதிகாலை 2.21 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பைப்பெற்றதாக அதன் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார்தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு செகிஞ்சன் நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு இயந்திரம், ஒரு EMRS வண்டி ஆகியவற்றுடன் எட்டு வீரர்கள் சென்றனர். இவ்விபத்தில் ஒரு கார் மற்றும் இரு லோரிகள் சம்பந்தப்பட்டு இருந்தாக அவர் குறிப்பிட்டார்.
காயமுற்ற எட்டு பேரில் அறுவர், பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். இருவர் மட்டும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, வேதனைக்கு ஆளாகினர். அவ்விருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.