கோலாலம்பூர், அக்டோபர் 26-
சுபாங், சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் 77 பயணிகளை ஏற்றிவந்த போயிங் 737 விமானம், விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் தகவலை போலீசார் மறுத்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கினால் அல்லது விபத்துக்குள்ளானால், ஆபத்து அவசர வேளைகளில் எத்தகைய மீட்பு நடவடிக்கை மற்றும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை மீட்புப்படையைச் சேர்ந்த சில ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் செயல்முறை விளக்க ஒத்திகை நடைபெற்றதாக பெடடாலிங் ஜெயா மாவட்ட போலீஸ்தலைவர் ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.
நேற்றிரவு நடைபெற்ற இந்த செயல்முறை விளக்க காட்சியை தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியான NADMA நேரடியாக கண்காணித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 67 பேர் கடுங்காயங்களுக்கு ஆளானதாக WhatsApp- பில் பகிரப்படும் தகவலில் உண்மையில்லை என்று ஷாருல்நிஜாம் ஜாபர் விளக்கினார்.