சுங்கை பூலோ,அக்டோபர் 26-
SDSI எனப்படும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொழில்துறை கண்காட்சியானது, SDSI தொழில்துறையினர் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோருக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முன்முயற்சிக்கு ஒரு சிறந்த தளமாகும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன் குறிப்பிட்டார்.
இந்த கண்காட்சியின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பாக சிலாங்கூரில் உள்ள தொழில்முனைவர்கள் ஓர் உயர்ந்த நிலைக்கு தங்கள் விற்பனையையும், வியாபாரத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும் என்று டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நாட்டில் தொழில்முனைவோர் துறையை மேம்படுத்துவதில் ஓர் உந்தும் சக்தியாக விளங்கும் SDSI திட்டத்தை தொடர்வதற்கு தனது அமைச்சு உறுதி பூண்டுள்ளதாகவும் டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
மடானி பொருளாதார இலக்குக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட தொழில்துறையினர், சிறந்து விளங்குவது மட்டுமின்றி, பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் ஜாம்பவனாகவும் விளங்க வேண்டும் என்ற நோக்கத்தை இத்திட்டம் கொண்டுள்ளதாக அவர் விளக்கினார்.
இன்று சுங்கை பூலோவில் பெட்டாலிங் மாவட்ட அரசாங்க அலுவலக வளாகத்தில் SDSI கண்காட்சியை தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
தொழில்முனைவர்களின் உணவு, பானம், கைவினைப் பொருட்கள் உட்பட தாங்கள் தயாரிக்கும் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுவதாக டத்தோஸ்ரீ குறிப்பிட்டார்.
