போர்ட் டிக்சன் ,அக்டோபர் 28-
மது போதையில் வாகனத்தை செலுத்தி, ஐந்தாம் ஆண்டு மாணவனை மோதித்தள்ளி காயம் விளைவித்ததாக கூடராங்கள் பொருத்தும் பணியாளர் ஒருவர் போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாடடப்பட்டார்.
28 வயது B. தங்கப்பாண்டி என்ற அந்த இளைஞர், மாஜிஸ்திரேட் உதுமான் அப்துல் கனி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி காலை 7 மணியளவில் போர்ட்டிக்சன், Jalan Pantai, 1.2 ஆவது கிலோமீட்டரில் தங்கப்பாண்டி இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் தங்கப்பாண்டி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து தங்கப்பாண்டி விசாரணை கோரியிருப்பதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு முடியும் வரையில் தங்கப்பாண்டியின் வாகனமோட்டும் லைசென்ஸை முடக்குவதற்கு நீதிமன்றத் உத்தரவிட்டுள்ளது.