கோலாலம்பூர் ,அக்டோபர் 28-
1MDB நிறுவனத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள மன்னிப்பு அவசியமற்றது என்று டிஏபி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நஜீப் கோரும் எந்தவொரு மன்னிப்பையும் ஏற்றுக்கொள்ளும் விவகாரம் அல்ல இது என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
கிரிமினல் குற்றம் என்றால் அது குற்றம்தான். அதனை மன்னிப்பு என்று ஒரு வரியில் கூறி, தாம் செய்த குற்றத்தை நியாயப்படுத்தி விட முடியாது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
நஜீப்பிற்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியே என்று ஒன்பது நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். எனவே அவரின் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே கிரிமினல் குற்றம் இழைத்தவர்கள், மன்னிப்பு கோரி, பரிகாரம் தேட முனைவது ஏற்புடையது அல்ல. இது மன்னித்து அருளும் விவகாரமும் அல்ல என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
மேலும் சிறைக்கைதிகளை, சிறைக்குப் பதிலாக வீட்டுக்காவலில் வைக்கும் உத்தேச சட்டத்திருத்த மசோதாவில் நஜீப் சம்பந்தப்படவில்லை என்பதையும் அந்தோணி லோக் விவரித்தார்.
இந்த சட்டத்திருத்த மசோதா, சிறைச்சாலையின் புதிய விதிமுறைகளில் மட்டுமே பொருந்தும் என்று அவர் விளக்கினார்.