சிலாங்கூர், அக்டோபர் 28-
தீபாவளித் திருநாளையொட்டி தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங், மரியாதை நிமித்தமாக இன்று திசைகள் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். துணை அமைச்சருடன் அவரின் சிறப்பு அதிகாரி ரவீணும் வருகை தந்தார்.
திசைகள் நிறுவனத்தின் உரிமையாளர் GK பசுபதி, கண்மணி, திசைகள் ஆசிரியர் இ.எம்.சாமி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் துணை அமைச்சர் தியோவை எதிர்கொண்டு வரவேற்றனர்.
ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கு தொடர்புத்துறை அமைச்சு சார்பில் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளும் வகையில் தமிழ் ஊடக அலுவலகங்களுக்கு மேற்கொண்டு வரும் நல்லெண்ண வருகையின் ஒரு பகுதியாக தியோவின் இவ்வருகை அமைந்திருந்தது.
ஒரு மணி, 5 மணி மற்றும் இரவு 10 மணி என்று நாள் ஒன்றுக்கு மூன்று செய்திகளை வழங்கி வரும் திசைகளின் அன்றாடப் பணிகளை தியோ பார்வையிட்டதுடன், செய்தியின் தன்மை மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பு குறித்து திசைகள் உரிமையாளர் பசுபதியும், ஆசிரியர் இ.எம்.சாமியும் விளக்கம் அளித்தனர்.
தவிர திசைகள் வெளியிட்டு வரும் திசைகள் மாதாந்திர சஞ்சிகையையும் தியோ பார்வையிட்டதுடன், அதன் உள்ளடக்கங்களையும் கேட்டறிந்தார்.
வாசகர்கள் மத்தியில் அச்சு ஊடகங்களை விட ஆன்லைன் செய்தி ஊடகங்களின் வேகம், அதன் தன்மை, தாக்கம் குறித்தும் தியோ தமது அனுபவத்தை விவரித்தார்.
ஆர்.டி.எம். முன்னாள் தமிழ் செய்தி வாசிப்பாளர் சிவகாமி கந்தசாமி போன்ற செய்திவாசிப்புத்துறையில் நிபுணத்துவத்தை கொண்டுள்ள செய்தி வாசிப்பாளர்களின் ஆற்றலை தொடர்ந்து பயன்படுத்தி வரும் திசைகளை துணை அமைச்சர் பாராட்டினார்.
நிகழ்வில் இறுதி அங்கமாக திசைகள் பணியாளர்களுக்கு முறுக்கு பெட்டலங்களை தீபாவளி அன்பளிப்பாக தியோ வழங்கியதுடன் தியோவின் இந்த சிறப்பு வருகையையொட்டி அவருக்கு திசைகள் சார்பாக சிறப்பு அன்பளிப்பை பசுபதி வழங்கினார்.
தீபாவளி திருநாளை கொண்டாடும் திசைகள் பார்வையாளர்களுக்கும் துணை அமைச்சர் தியோ, பணியாளர்களுடன் இணைந்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.