புத்ராஜெயா,அக்டோபர் 28-
தன்னை சட்டரீதியாக ஓர் ஆணாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி, கடந்த எட்டு ஆண்டு காலமாக ஒரு பெண் நடத்திய வந்த சட்டப் போராட்டம் இன்று தோல்வியில் முடிந்தது.
அந்தப் பெண்ணின் சட்டப்போராட்டத்தின் இறுதிக்கட்ட மேல்முறையீட்டை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தாய்லாந்தில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம் தாம் ஒரு ஆணாக மாறிவிட்டதால், தனது MyKad அட்டையில்
தாம் ஓர் ஆணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரி தேசியப் பதிவு இலாகாவிற்கு எதிராக அந்தப் பெண் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார்.
அரசாங்க ஆவணத்தில் சட்ட ரீதியாக ஒரு பெண்ணாக, பாலியல் அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர், தன்னை ஆணாக அங்கீகரிக்கும்படி செய்து கொண்ட இந்த வழக்கு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது தவறாகும் என்று கூட்டரசு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
அதேவேளையில் அந்தப் பெண், தனது வழக்கு மனுவிற்கு வலு சேர்ப்பதற்கு நான்கு உள்ளூர் மருத்துவ நிபுணர்கள் வழங்கிய உறுதி கடிதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.