1,700 வெள்ளி குறைந்த பட்ச சம்பள விகித உயர்வு ஒற்றுமை அரசாங்கத்தின் துணிகர நடவடிக்கையாகும்

கோலாலம்பூர், அக்டோபர்28-

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குறைந்த பட்ச சம்பள விகிதம், 1,700 வெள்ளியாக உயர்த்தப்பட்டு இருப்பது ஒற்றுமை அரசாங்கத்தின் தெளிவான அரசியல் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்தார்.

குறைந்த பட்ச சம்பளம் 1,500 வெள்ளியிலிருந்து 1,700 வெள்ளியாக உயர்த்தப்பட்டு இருப்பது உண்மையிலேயே ஒற்றுமை அரசாங்கத்தின் துணிகர நடவடிக்கையாகும் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்துமாறு நிறுவனங்களை கேட்டால், முடியாது, சாத்தியமில்லை என்றுதான் பதில் வரும். எனவே அமைச்சரவை உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்தப்பின்னர் இந்த துணிச்சலான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

உற்பத்தித்திறன் பெருக்கம், நாட்டின் பொருளியல் வளர்ச்சி முதலியவை தொழிலாளர்களின் உழைப்பை சார்ந்துள்ளது. அந்த தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தால் மட்டுமே நாடு வளம் பெறும். முதலீடுகள் பெருகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயா மடானி குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கிவைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS