கோலாலம்பூர், அக்டோபர் 29-
தீபாவளி திருநாளை முன்னிட்டு வரக்கூடிய நீண்ட விடுமுறையை கழிப்பதற்கு பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமையும், நாளை புதன்கிழமையும் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டதால் பலர் இன்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலை உள்ளது.
உயர் கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பவும், குடும்பத்தினருடன் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடவும் ஏதுவாக அவர்கள் வீட்டிலிருந்து படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நீண்ட விடுமுறையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு 21 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று அந்த நெடுஞ்சாலை வாரியம் அறிவித்துள்ளது.
வழக்கமான நாட்களில் 18 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் நிலையில் தீபாவளியையொட்டி வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அந்த வாரியம் தெரிவித்துள்ளது.