வீட்டுக்காவல் அமலாக்கத்தில் நஜீப் இடம் பெறக்கூடாது அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்

கோலாலம்பூர், அக்டோபர் 29-

அரசாங்கம் அமல்படுத்தவிருக்கும் சிறைக்கைதிகளுக்கான வீட்டுக்காவல் திட்டத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உட்பட பிரபலங்கள் தொடர்புடைய முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் இடம் பெற மாட்டார்கள் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் கேட்டுக்கொண்டார்.

அம்னோவின் முன்னாள் தலைவரான நஜீப், தம்முடைய செயலுக்காக திடுத்திப்பென்று மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதற்கான அவசியம் குறித்தும் முன்னாள் சட்டத்துறை துணை அமைச்சரான ராம் கர்ப்பால் வினவினார்.

குறிப்பிட்ட குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மாற்றுத் தண்டனையாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு ஏதுவாக நடப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான முன்னெடுப்புகளை அரசாங்கம் அறிவித்தவுடனே நஜீப், மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு குற்றவியல் வழக்கில் 50 சாட்சிகள் வாக்குமூலம் அளித்த நிலையில் நஜீப் குற்றவாளி என்று எல்லா நிலைகளிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களிடம் நஜீப் மன்னிப்பு கோருவது அவசியமற்றது என்பதுடன் இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதமர் என்ற முறையில் நஜீப் புரிந்தது மிகப்பெரிய குற்றமாகும். அவரின் செயல்பாட்டினால் நாட்டின் இலக்கும், நோக்கமும் பாதிக்கப்பட்டு விட்டதாக இன்று மக்களவையில் ராம் கர்ப்பால் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS