கோலா லங்காட்,நவம்பர் 04-
அந்நிய நாட்டவர்கள் குவிந்துள்ள அம்பாங், பாண்டன் மேவா பகுதி தற்போது போலீசாரின் தீவிர கண்காணிப்புக்குரிய இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட பகுதியில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்கு மலேசிய குடிநுழைவுத்துறையுடன் ஒன்றிணைந்து போலீஸ் துறையும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக டத்தோ உசேன் குறிப்பிட்டார்.
பாண்டன் மேவா மட்டுமின்றி,கோலா சிலாங்கூர் மற்றும் சுங்கை பூலோ போன்ற பகுதிகளும் போலீசாரின் கண்காணிப்புக்கு உரிய இடங்களாக உள்ளன என்று அவர் கூறினார்.
அம்பாங், பாண்டன் மேவா அடுக்குமாடி குடியிருப்புப்பகுதியில் அந்நிய நாட்டவர்கள் குவிந்து இருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலைத் தொடர்ந்து டத்தோ உசேன் இவ்வாறு தெரிவித்தார்.
உணவகங்கள், வாகன கழுவும் மையம் போன்ற வர்த்தகத் தளங்களை உருவாக்கி, பெரிய சாம்ராஜ்யத்தை அந்நிய நாட்டவர்கள் கொண்டு இருப்பதாக அவை செய்தி வெளியிட்டுள்ளன.