பகாங் மாநில மக்கள் தயாராக வேண்டும்

குவாந்தன்,நவம்பர் 04-

வட கிழக்கு பருவமழை, நாளை நவம்பர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் வட கிழக்கு பருவமழை, வெள்ளத்தை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்க் கொள்ள பகாங் மக்கள் தயாராக வேண்டும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கேட்டுக்கொண்டார்.

இடர்கள் நிறைந்த பகுதிகளில் வசிக்கின்றவர்கள், மிக எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கும்படி மந்திரி பெசார் அறிவுறுத்தியுள்ளார்.

பேரிடர் போன்ற விரும்பத்தகாத சம்பவம், நிகழ்வதிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய வானிலைத்துறையான MetMalaysia வெளியிட்ட அறிக்கையின்படி, கனத்த மழை கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர், சரவாக், சபா போன்ற மாநிலங்களில் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையான முன்னேற்பாடுகளை எடுக்கும்படி மந்திரி பெசார் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS