கோலாலம்பூர், நவம்பர் 04-
கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை விரிவுப்படுத்துவதற்கான கட்டுமானங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பொதுப் பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் நிலவி வரும் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, கிழக்கு கரை மாநிலத்திற்கும் கோலாலம்பூருக்கும் இடையில் ஒரு மாற்றுப் பாதையை உருவாக்கும் திட்டத்தை ஆராய்வது இதன் பிரதான நோக்கமாகும் என்று துணை அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
LTU எனப்படும் லிங்கரன் தேங்கா உத்தமா புறவட்ட சாலையின் இணைப்பை நிறைவு செய்வதற்கும், கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையின் இணைப்பை மேம்படுத்துவதற்கும், இயற்கை சூழல் நிறைந்த வனப்பகுதியுடன் செல்வதற்கு இந்த உத்தேசத் திட்டம் வகை செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அஹ்மத் மஸ்லான் தெரிவித்தார்.
தற்போது பரிசீலனையில் உள்ள திட்டத்தில் நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்கு தேவைப்படக்கூடிய நிலத்தை ஆராய்வதும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அஹ்மத் மஸ்லான் தெரிவித்தார்.
கோம்பாக் டோல் சாவடியில் தொடங்கி பகாங், பென்டாங் வரையிலுமான 45.3 கிலோ மீட்டர் தூரத்திலான இந்த நெடுஞ்சாலைத் திட்டம், 210 கோடி வெள்ளி செலவை உள்ளடக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.