மாற்றுத் திறனாளியை அடித்து காயப்படுத்திய மெய்க்காவலருக்கு வெள்ளி ஆயிரம் அபராதம்

கோலாலம்பூர், நவம்பர் 04-

காது கேளாதவரான ஒரு மாற்றுத் திறனாளியை அடித்து, காயப்படுத்திய குற்றத்திற்காக பிரமுகர் ஒருவரின் போலீஸ் மெய்க்காவலர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

தௌபிக் இஸ்மாயில் என்ற அந்த லான்ஸ் கார்போரல், மாஜிஸ்திரேட் ஃபரா நபிஹா டான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த மெய்க்காவலர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த மே 28 ஆம் தேதி காலை 11.40 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், St Regis ஹோட்டல் முன் வளாகத்தில் 47 வயது e-hailing ஓட்டுநரான ஓங் இங் கியோங் என்பவரை தாக்கியதாக 32 வயதுடைய அந்த மெய்க்காவலர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மெய்க்காவலர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

ஜோகூர், இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் – மின் மெய்க்காவலரான தௌபிக் , அந்த ஹோட்டலின் வெளிவளாகத்தில் e- hailing வாகனத்தில் பயணிக்காக காத்திருந்த அந்த மாற்றுத்திறனாளியை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் உத்தரவிட்டு இருந்தார்.

அந்த மெய்க்காவலருக்கு எதிராக மாற்றுத் திறனாளி செய்து கொண்ட போலீஸ் புகார், கண்டுக் கொள்ளப்படவில்லை என்று பல்வேறு சமூக போராட்டக்குழுக்கள் கேள்வி எழுப்பி வந்தன.

WATCH OUR LATEST NEWS