ஷா ஆலாம், நவ.6-
தேச நிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கெடா மந்திரி பெசார் சனூசி நோர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யக்கோரி, சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள பிரதிநிதித்துவ மனு குறித்து இன்னும் முடிவு காணப்படவில்லை என்று ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் இன்று காலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனூசியின் பிரதிநிதித்துவ மனு மீதான விண்ணப்பம், சட்டத்துறை அலுவலகத்தில் இன்னமும் பரிசீலனையில் இருந்து வருகிறது. எனவே இது குறித்து பரிசீலனை செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அரசு தரப்பில் ஆஜராகியுள்ள துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அப்துல் மாலிக் அயோப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அஸ்லாம் ஸைனுதீன், மந்திரி பெசார் சனூசி மீதான வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
அதேவேளையில் சனூசிக்கு எதிரான தேச நிந்தனை குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது, இதுவே கடைசி முறையாகும் என்ற நினைவுறுத்தலையும் நீதிபதி வழங்கினார்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம், சிலாங்கூர், கோம்பாக்கில் சிலாங்கூர் ஆட்சியாளருக்கு எதிராக நிந்தனை தன்மையில் தாம் ஆற்றிய உரைக்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரபுடீன் இட்ரிஸ் ஷா விடம், கடந்த செப்டம்பர் மாதம் சனூசி பகிரங்க மன்னிப்புக்கோரினார்.
தம்முடைய இந்த செயலுக்காக மிக வருத்தத்தில் இருப்பதாகவும், ஆட்சியாளர்கள் மீதான மரியாதையை நிலைநிறுத்தும் மலாய் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு இணங்க, இனி அறிக்கை வெளியிடுவதில் தாம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதாக சனூசி தமது பகிரங்க மன்னிப்பில் கோரியுள்ளார்.