கோலாலம்பூர், நவ. 19-
நான்கு நாட்களுக்கு முன்பு, பிஎம்.டபிள்யூ. ரக காரை அபாயகரமாக செலுத்தி, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மோதித்தள்ளி, 7 வயது சிறுமிக்கு மரணம் விளைவித்ததாக வர்த்தகர் ஒருவர், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
31 வயது P. குகன் ராஜ் என்ற அந்த பிஎம்.டபிள்யூ. கார் ஓட்டுநர், கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு 9.50 மணியளவில் கோலாலம்பூரிலிருந்து, பூச்சோங்கை நோக்கி செல்லும் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் தமது பெற்றோருடன் பயணித்த 7 வயது சிறுமி நூர் நாவ்ரா நத்தியா என்பவருக்கு மரணத்தை விளைவித்ததாக குகன் ராஜ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இச்சம்பவத்தில் அந்த சிறுமி மரணம் அடைந்த வேளையில் சிறுமியின் பெற்றோர் கடும் காயங்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியப் பின்னர் காரை நிறுத்தாமல் சென்று விட்டதாக கூறப்படும் குகன்ராஜ், இச்சம்பவம் குறித்து கோலாலம்பூர் போலீஸ் துறையிடம் வாக்குமூலம் அளிப்பதற்கு வந்த போது கைது செய்யப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் குகன் ராஜ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றச்சாட்டை மறுத்து, குகன் ராஜ் விசாரணை கோரியிருப்பதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் அவரை 12 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.