கோலாலம்பூர், நவ. 20-
வரும் ஜனவரி மாதம் முதல் சமூக வலைத்தள உரிமம் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்கள் எதுவும் மூடப்படாது. ஆனால், உரிமம் பெறத் தவறும் தளங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என தொடர்புத்துறை அமைச்சர் பாஹ்மி பாட்ஸில் தெரிவித்தார்.
அவ்வாறு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் பட்சத்தில் அதன் உரிமையாளர் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படுவதற்கான சூழலும் உண்டு என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அபராதத்தற்கு அப்பாற்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. இந்த உரிமம் செயல்பாடு, தனி நபர் மீதானது அல்ல. முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளத்தை பயன்படுத்தும் தரப்பினருக்கானதாகும் என்று பாஹ்மி பாட்ஸில் விளக்கினார்.
தவிர இந்த உரிம வரையறுப்பு அமலாக்கம் இணையம், ஊடகச் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை ஒரு போதும் பாதிக்காது. அவர்கள் இன்னும் பாதுகாப்புடன் இலக்கவியல் அனுபவத்தை தொடர்ந்த பெற முடியும் என்று பாஹ்மி பாட்ஸில் விளக்கினார்.