சொக்சோ உரிமைக்கோரல் மோசடியில் சிக்கிய 5 மருத்துவர்கள் பணிக்கு திரும்ப அனுமதி

கோலாலம்பூர், நவ. 20-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் உரிமைக்கோரல் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சுகாதார அமைச்சை சேர்ந்த 5 மருத்துவர்கள், தங்களின் மருத்துவப் பணியை மீண்டும் தொடங்கியுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஆளாகியுள்ள அந்த ஐந்து மருத்துவர்களின் விசாரணை சம்பந்தப்பட்ட முடிவுக்காக சுகாதார அமைச்சு காத்திருக்கும் வேளையில் அந்த ஐவரையும் மற்ற மருத்துவமனைகளுக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக டாக்டர் சுல்கிப்லி அகமட் குறிப்பிட்டார்.

SPRM விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 1993 ஆம் ஆண்டு மருத்துவ அதிகாரிகள் நன்னடத்தை ஒழுக்க மீறல்கள் விதிமுறையின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதையும் டாக்டர் சுல்கிப்லி அகமட் சுட்டிக்காட்டினார்.

அவர்களுக்கு எதிரான 30 நாள் பணியிடை நீக்கம் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதியுடன் முடிவுற்றது. தற்போது அந்த ஐந்து அதிகாரிகளும் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால், SPRM – மின் விசாரணை முடிவு மற்றும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுவது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கை குறித்து ஒரு முடிவு தெரியும் வரையில் அந்த ஐவரும் பணிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் சுல்கிப்லி அகமட் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

சொக்சோ சந்தாதாரர்களின போலியான இயலாமை இழப்பீட்டு உரிமைக்கோரல்கள் விண்ணப்பங்களை அங்கீகரித்து, சொக்சோவை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் அரசாங்க மருத்துவமனைகளைச் சேர்ந்த அந்த ஐந்து மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த ஐவரில் இருவர் பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். ஒருவர், பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS