கோலாலம்பூர், நவ. 20-
தனது சொத்து விவரங்களை பிரகடனப்படுத்த தவறிவிட்டதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுதீனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் பிராசிகியூஷன் தரப்பு மீட்டுக்கொண்டது.
86 வயதான துன் டாயிம், கடந்த வாரம் காலமானதைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிராசிகியூஷன் தரப்பு மீட்டுக்கொள்கிறது என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஷஹாரடின் லாடின், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் தெரிவித்தார்.
சொத்துக்களை அறிவிக்கத் தவறியது தொடர்பில் துன் டாயிமிற்கு எதிரான குற்றவியல் வழக்கின் பூர்வாங்க விசாரணை, இன்று புதன்கிழமை காலையில் நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் தொடங்கிய போது, துன் டாயிமின் வழக்கில் சட்டத்துறை அலுவலகத்தின் நிலைப்பாட்டை ஷஹாரடின் லாடின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங், கெடா, கோலாலம்பூர் மற்றும் இதர ஆறு இடங்களில் உள்ள சொத்து விபரங்கள் மற்றும் 18 நிறுவனங்களில் தனக்கு உள்ள பங்குரிமைகள் குறித்து துன் டாயிம் , பிரகடன்படுத்தத் தவறிவிட்டதாக அவருக்கு எதிராக இவ்வாண்டு ஜனவரி மாதம் ஊழல் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
பக்கவாத நோயினால் அவதியுற்ற நிலையில், சக்கர வண்டியில் நீதிமன்றத்தில் ஆஜராகிய துன் டாயிம், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.
இவ்வழக்கில் துன் டாயிமின் மறைவுக்கு பிராசிகியூஷன் தரப்பு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது