கோலாலம்பூர், நவ. 20-
மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியர்கள் வாரத்திற்கு மூன்று மணி நேரம் கூடுதலாக பணிபுரிய வேண்டும் என்ற புதிய அரசாங்க விதிமுறையின் மீது பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துரைத்த Senatorரும் பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான ஆர். லிங்கேஸ்வரன் தெரிவிக்கயில், தற்போது காலை 7 மணி முதல் பிற்[பகல் 2 மணி வரையிலும், பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும், இரவு 9 மணியில் இருந்து மறு நாள் காலை 7.00 மணி வரையிலும் ஷிப்ட் முறையில் தாதியர்கள் பணி புரிந்து வருகின்றனர் என்றார்.
எதிர்வரும் டிசம்பர் 1 முதல், ஷிப்ட் முறையில் பணிபுரியும் தாதியர்கள், வாரத்திற்கு 45 மணி நேரம் பணிபுரிய வேண்டும். இது தற்போதுள்ள 42 மணி நேர வரையறையைக் காட்டிலும் 3 மணி நேரம் அதிகமாகும்.
இந்த புதிய வேலை நேர வரையறையின் காரணமாக, தாதியர்களின் பணி நேரம் மாற்றியமைக்கப்படலாம். ஆனால், இந்த மாற்றம் அவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என்று தாதியர் சங்கங்களும் கூறுவதாக லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
தாதியர்கள் பொதுவாக இரவு நேரங்களில் பணிபுரிந்து அவசரகால சூழ்நிலைகளை கையாள வேண்டியிருக்கும். எனவே, அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடிவதில்லை. சில சமயங்களில் அவர்களுக்கு சாப்பிடும் நேரமும் தாராளமாகக் கிடைப்பதில்லை. மேலும், அவர்கள் தங்களது குடும்பத்துடன் செலவிடும் நேரத்தையும் இழக்க நேரிடுகிறது. அதே சமயம், தனியார் துறையில் இரவு நேரம் பணி புரிந்தால் வழங்கப்படும் கூடுதல் ஊக்கத்தொகையைப் போல் தாதியர்களுக்குப் போதுமான ஊக்கத் தொகையும் வழங்கப்படுவதில்லை என அவர் மேலும் சொன்னார்.
வழக்காமன் வேலை நாட்களில் அலுவலக பணி செய்யும் அரசு ஊழியர்களுக்கும் ஷிப்ட் முறையில் இரவு நேரம் உட்பட வேலை செய்யும் தாதியரகளுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகக் கூறிய மலேசிய தாதியர் சங்கத்தின் தலைவர் சாய்டஹ் அத்மன் குறிப்பிடுகயில், பெரும்பாலான தாதியர்கள் குடும்பத் தலைவிகளாக இருக்கிறார்கள், மேலும் வேலை நேரத்தை அதிகரிப்பது அவர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார்.
அரசாங்க ஊழியர்களின் வேலை நேர மாற்றம் குறித்து பொதுச் சேவைத் துறை அறிக்கையை வெளியிட்டிருந்தாலும், சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ ஆணைக்கு தாதியர்கள் இன்னும் காத்திருப்பதாக சாய்டஹ் அத்மன்கூறினார்.