சரவாக் கடலோர துரப்பணக் கண்டத்தில் எண்ணெய், எரிவாயு சர்ச்சை

பெட்டாலிங் ஜெயா, நவ.20

மலேசியாவின் கிழக்குகரை மாநிலமான சரவாக் கடலோரப் பகுதியில் காணப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு ( O&G ) வளங்கள் யாருக்குச் சொந்தமானது என்ற உரிமைப் பேராட்டம் தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸுக்கும், சரவாக் மாநிலத்திற்கும் இடையிலான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.

1974 ஆம் ஆண்டு பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் 2 ஆவது பிரிவின்படி தரைமார்க்கப் பகுதியிலும், கடலோரப்பகுதியிலும் உள்ள அனைத்து பெட்ரோலிய வளங்களுக்கான முழுமையான, பிரத்தியேக உரிமையை பெட்ரோனாஸ் கொண்டுள்ளது.

மற்றொரு புறத்தில், 1958 ஆம் ஆண்டு சரவாக் எண்ணெய் மற்றும் சுரங்க ஆணை சட்டத்தின்படி இந்த வளங்கள் யாவும் தனக்கே சொந்தம் என்று சரவாக் கூறுகிறது. பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், சரவாக் எண்ணெய் மற்றும் சுரங்க ஆணை சட்டம் இன்னமும் அமலில் இருக்கின்ற ஆற்றல் வாய்ந்த சட்டமாக உள்ளது என்று சரவாக் வாதிடுகிறது.

1954 ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணெய் துரப்பணக் கண்டம், தனது எல்லைக்குள் இருப்பதாக சரவாக் கூறுகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு சரவாக், மலேசியாவுடன் இணைந்த போதும்கூட அந்த எல்லைகள் அப்படியே இருப்பதாக அந்த மாநிலம் வாதிடுகிறது.

இது, லூகோனியா ஷோல் சுற்று வட்டாரப் பகுதி உட்பட தென்சீனாக் கடலில் வளங்கள் நிறைந்த பகுதிகளில் எண்ணெய் தோண்டுவதற்கான பெட்ரோனாஸின் உரிமையை சவால் விடுவதற்கான ஒரு முக்கிய சர்ச்சையாக கருதப்படுகிறது.

நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் 60 விழுக்காடு இருப்பதாக மதிப்பிடப்படும் இப்பகுதி, மலேசியாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் ( LNG ) பெரும்பகுதியை உருவாக்குகிறது. இது பெட்ரோனாஸின் 90 விழுக்காடு LNG ஏற்றுமதியை நிறைவேற்ற போதுமானதாகும்.

பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போன்று 5 விழுக்காடு எண்ணெய் உரிமத்தை மட்டுமே பெறுவதில் இன்னமும் மனநிறைவு கொள்ளாமல், உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு வருமானம் அனைத்திலும் பெரும் பங்கை தங்களுக்கு வழங்கும்படி சமீப காலமாக சரவாக் கோரி வருகிறது.

சரவாக்கின் வாதமானது, சட்டத்தின் அடிப்படையில் அதன் கடலோர அனைத்து வளங்களையும் தனியொரு நபராக உரிமைக்கோருவதற்கும், அதனை ஆதரிப்பதற்கான உரிமையையும் தாம் கொண்டுள்ளதாக கூறுகிறது.

இது அவர்களின் எண்ணெய் அல்ல, தெங்கு ரசாலி

முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா கூறுகையில், மாநில எண்ணெய் வளங்களை கோருவதற்கு பெட்ரோனாஸைவிட சரவாக்கிற்கு அதிகபடியான உரிமை இல்லை என்று குறிப்பிடுகிறார்.

“ அது அவர்களின் எண்ணெய் இல்லை. 1963 ஆம் ஆண்டில் மலேசியாவின் ஒரு பகுதியாக சரவாக் இணைவதற்கு ஒப்பந்தம் வரையப்பட்ட போது அந்த சமயத்தில் இது குறித்து விவாதிக்கப்படவில்லை” என்று பெட்ரோனஸின் முதலாவது தலைவரான தெங்கு ரசாலி ஹம்சா FMT- யிடம் கூறினார்.

இதற்கு முன்பு, கையெழுத்திடப்பட்ட உரிமம் ஒப்பந்தத்தின் கீழ் சரவாக், தனது கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்று தெங்கு ரசாலி கேட்டுக்கொண்டார்.

நீங்கள் முன்னுக்குபின் முரணாக செயல்பட முடியாது. ஒப்பந்தம் என்றால் ஒப்பந்தம்தான் என்று தெங்கு ரசாலி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் சரவாக் மாநிலம் நியாயமான உரிமைக்கோரலை கொண்டுள்ளதா? அந்த மாநிலம் முன்வைத்த சட்ட சர்ச்சையை FMT கண்ணோட்டமிடுகிறது.

சரவாக் கடல் சார் எல்லைகள்

சரவாக் மாநிலம், 1963 க்கு முன்பு பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. மலேசிய கூட்டரசில் ஒரு மாநிலமாக இணைந்தது மூலம் அது சுதந்திரம் பெற்றது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த போது இரண்டாவது எலிசபெத் அரசியார், 1954 ஆம் ஆண்டில் சரவாக்கில் “கவுன்சில் இன் ஆர்டர்” எனும் எல்லைகளை மாற்றுவது தொடர்பில் ஓர் உத்தரவை பிறப்பித்தார்.

அந்த உத்தரவானது காலனியின் எல்லைகள், எண்ணெய் துரப்பணக் கண்டத்தையும், சரவா மாநிலத்தின் பிராந்திய நீர்நிலைகளுடன் இணைந்து கடற்பரப்பு மற்றும் நிலத்தடி ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது.

சரவாக் மாநில சட்டமன்றத்தின் சபா நாயகர் ஆஸ்ஃபியா அவாங் நஸார் கூற்றுப்படி, மலேசியாவின் ஒரு பகுதியாக சரவாக் இணைந்த போது கடற்கரைக்கு வெளியே உள்ள எண்ணெய் துரப்பணக் கண்டமும் சரவாக் எல்லைக்குள் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டு விட்டது என்பதே இதன் பொருளாகும் என்கிறார்.

2019 அக்டோபர் மாதம், டயாக் டெய்லி பத்திரிகை இவ்வாறு கூறியதை ஆஸ்ஃபியா சுட்டிக்காட்டுகிறார்.

சரவாக்கின் எண்ணெய் துரப்பணக் கண்டம், பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் அரசியலமைப்பு ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் பெறப்பட்டது என்பது மத்திய அரசாங்கத்தின் வாதமாக இருந்தால், அது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 2 ஐ மீறியிருந்தாலும் மத்திய அரசாங்கம், மாநில அரசுக்கு சந்தை விலையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

சரவாக், 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியாவுடன் இணைந்த போது அந்த எண்ணெய் துரப்பணக் கண்டம், தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்பதை கோருவதற்கு அரசியலமைப்பு சட்டம், இரண்டாவது பிரிவின் துணை சட்டவிதி 4 ( 3 ) ஐ சரவாக் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றும் எந்தவொரு சட்டமும் அதன் மாநில சட்டமன்றம் மற்றும் ஆட்சியாளர்களின் மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 2 ( b ) ஐயும், சரவாக் அரசு சுட்டிக்காட்டுகிறது.

மேற்கண்ட இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை. எனவே அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றாமல் எல்லைகள் மீதான எந்தவொரு திருத்தமும் ரத்து செய்யப்படுகிறது,. செல்லத்தக்கது அல்ல, சட்டவிரோதமானது என்று சரவாக் கூறுகிறது.

எண்ணெய் துரப்பணக் கண்டம்

“எண்ணெய் துரப்பண கண்டம்” எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.

கடல்சார் வழக்கறிஞரான லீயூவ் தெக் ஹுவாட் கூறுகையில், சரவாக்கின் சட்ட நிலைப்பாடடில் சிக்கல் உள்ளது என்கிறார்.

1954 ஆம் ஆண்டின் “ஆர்டர் இன் கவுன்சில்” எண்ணெய் துரப்பணக் கண்டத்தை உள்ளடக்கிய எல்லைகளை விரிவுப்படுத்தியுள்ளதாக சரவாக் கூறுகிறது. இது அதன் பிராந்திய கடல் எல்லையில் இருந்து 200 கடல் மைல் வரை உள்ளடக்கியிருப்பதாக அது கூறுகிறது.

ஆனால், 200 கடல் மைல் தூரம் குறித்து “ஆர்டர் இன் கவுன்சில்” தனது குறிப்பில் எதனையும் பிரத்தியேகமாக குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், அது வெளியிடப்பட்ட நேரத்தில் எண்ணெய் துரப்பணக் கண்டம் எனறால் என்ன என்ற அதன் உள்ளார்ந்த கோட்பாடு முழுமைப்பெறாத நிலையில் இருந்தது.

1982 ஆம் ஆண்டு ஐநா. சபையில் கடல் சட்டம் மீதான மாநாட்டில் அன்க்ளோஸ் ( Unclos ) கடல், கடல் சார் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக உள்ளடக்கிய ஒரு விரிவான சட்ட கட்டமைப்பை வரைவதற்கு அனைத்துலக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

1982 இல் அந்த அன்க்ளோஸ் கடல் சட்ட ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு டிசம்பரில் 1969 அவசரகால பிரகடன சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தினால் 2012 ஆம் ஆண்டு பிரதேச கடல் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட போது மலேசியாவின் சட்டங்களில் ஒரு பகுதியாக இந்த அன்க்ளோஸ் கடல் சட்டம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று லியூவ் விளக்கினார்.

எல்லையில் உள்ள தவற்றை திருத்துவதற்காக பிராந்திய கடல் சட்டம் 2012 இல் நிறைவேற்றப்பட்டது அல்லது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 2 (2) பிரிவுக்கு இணக்காததால் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று சரவாக்கின் வாதம் அடிப்படையற்றது என்று சட்ட நிபுணர் கூறுகிறார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்தினால் சட்டமாக இயற்றப்படும் எந்தவொரு சட்டமும் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டாலன்றி, செல்லுபடியாகும், செல்லத்தக்கதாகும், செயல்படுத்தக்கூடியதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

சரவாக் மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஒரு சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று வாதிடும் தரப்பினர், அதனை கூட்டரசு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று சவால் விட வேண்டும் என்று லியூவ் கூறுகிறார்.

அன்க்ளோஸில் வகைப்படுத்தப்பட்டுள்ள 200 கடல் மைல் வரம்பு, அந்த அனைத்துலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தரப்பினர் என்ற முறையில் அது மலேசியாவிற்கு உரியதாகும் என்பதையும் லியூ வாதிடுகிறார்.

எனவே சரவா உட்பட மலேசிய கடலோர எண்ணெய் துரப்பணக் கண்டம் மீதான உரிமை நாட்டிற்கு சொந்தமானகும் என்பதே இதன் பொருளாகும்.

இந்த கொள்கையின் அடிப்படையில் பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் மற்றும் பிரதேச கடல் சட்டம் ஆகியவை சில தரப்பினர் கூறுவதைப் போல சரவாக் எல்லைக்குள் நுழையவில்லை. அவை நல்ல சட்டங்களாகும் என்று லியூவ் வாதிடுகிறார்.

வரலாற்று எல்லைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டரசு அதிகாரங்களை உரசிப்பார்க்கும் பல்வேறு விவகாரங்கள் எழுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பற்கு நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படாவிட்டால் பெட்ரோனாஸும், சரவாக்கிற்கும் இடையிலான எந்தவொரு சர்ச்சைக்கும் தீர்வு காண முடியாமல் அப்படியேதான் நீடிக்கும் நிலை ஏற்படும்.

WATCH OUR LATEST NEWS