நவ. 20-
பினாங்கு, தாசேக் குளுகோரில் ஏற்பட்ட கைகலப்பில் உள்ளூர் ஆடவரின் கண்ணைத் தோண்டி, கடும் காயத்தை விளைவித்த அந்நிய நாட்டுப்பிரஜை ஒருவர், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டர்வொர்த், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
அகதிக்கான ஐ.நா. தூதரக அட்டையை வைத்துள்ள 28 வயதுடைய அந்த ஆடவர், தற்போது மூன்று நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில் அவர் மீது குற்றவியல் சட்டம் 352 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அந்த நபருக்கு எதிரான தடுப்புக்காவல் முடிந்த நிலையில் தடுப்புக்காவல் அனுமதி நீடிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.
கடந்த கடந்த சனிக்கிழமை, தாசேக் குளுகோர், ஜாலான் ஆரா கூடாவில் நிகழ்ந்த கைகலப்பில் 52 வயதுடைய உள்ளூர் ஆடவர் பார்வையை இழந்துள்ளார். அவரின் கண் தோண்டப்பட்டதால் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்.
மிக மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட அந்த 28 வயதுடைய அந்நியப்பிரஜையின் பின்னணி விவரங்களை மலேசிய குடிநுழைவுத்துறையிடமிருந்து போலீசார் கோரியுள்ளதாக அனுவார் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.