லஞ்ச ஊழல் ஒன்பது மாதங்களில் 45 போலீஸ் அதிகாரிகள் கைது

நவ. 20-

லஞ்சம் பெற்றது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது முதலிய ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த ஜனவரியிலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 45 போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத்துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

இதே காலக்கட்டத்தில் பல்வேறு குற்றங்களுக்காக 27 போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அயோப் கான் சுட்டிக்காட்டினார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும தர நிலை இணக்கத்துறை, / விதிமுறைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் போலீஸ்காரர்களுக்கு எதிராக 1,557 ஒழுங்கு நடவடிக்கை அறிக்கைகளையும், 1,118 விசாரணை அறிக்கைகளையும் திறந்துள்ளதாக அயோப் கான் குறிப்பிட்டார்.

இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து அரச மலேசிய போலீஸ் படை நடத்திய லஞ்ச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அயோப் கான் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் லஞ்சத்தை நிராகரிப்பதில் தங்களின் நேர்மையை வெளிப்படுத்தி, போலீஸ் படைக்கு பெருமை சேர்த்த 51 போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பாராட்டுப்பத்திரத்தைப் பெற்றனர்.

WATCH OUR LATEST NEWS