கோலசிலாங்கூர், நவ.21-
கடந்த நவம்பர் 10 ஆம் தேதி கோல சிலாங்கூர், தாமான் ரூவில் உள்ள ஓர் உணவகத்தில் பத்து ஆடவர்கள் சம்பந்தப்பட்ட அடிதடி சம்பவமானது, வாடிக்கையாளர் ஒருவர், மற்றொரு வாடிக்கையாளரை கன்னத்தல் அறைந்தது, இந்த சண்டைக்கான முக்கிய காரணமாகும் என்று கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாருடின் தஜுடின் தெரிவித்தார்.
அன்றைய தினம் பிற்பகல் 3.52 மணியளவில் அந்த உணவகத்தின் உரிமையாளர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் நிகழ்ந்த அடிதடி சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தனது இருக்கையில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், மற்றொரு மேஜையில் இருந்த நபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால், இரு கும்பல்களுக்கு இடையில் அடிதடி நடந்துள்ளது.
இந்த அடிதடி சம்பவத்தின் போது உணவகத்தின் நாற்காலிகள், மேஜைகளை தூக்கி எறியப்பட்டும், கவிழ்க்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த உணவக உரிமையாளர் போலீசில் புகார் செய்து இருப்பதாக அஸாருடின் தஜுடின் தெரிவித்தார்.
இந்த அடிதடி சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வரும் வேளையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள், போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அஸாருடின் தஜுடின் கேட்டுக்கொண்டுள்ளார்.