நிரந்தர வசிப்பிட அந்தஸ்துக்கான போலி அடையாள அட்டை, கும்பல் முறியடிப்பு

ஜோகூர்பாரு, நவ. 21-


மலேசியாவில் வசிப்பதற்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்துக்கான போலி அடையாள அட்டையை தயாரித்து ஒவ்வொருவரிடமும் தலா 7 ஆயிரம் வெள்ளிக்கு விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றை ஜோகூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக வாடிக்கையாளர்களுடன் அலுவல் கொண்டிருந்த இந்த மோசடிக்கும்பல் தொடர்பில் ஜோகூர் கூலாய், ஸ்ரீ ஆலாம், ஜோகூர்பாரு மற்றும் சிலாங்கூர் காஜாங் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் இக்கும்பல் முறியடிக்கப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கைகளில் 27 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு உள்ளூரைச் சேர்ந்தவர்கள், ஏழு அந்நிய நாட்டவர்கள் என மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

நிரந்தர குடியிருப்பு அந்தஸ்துக்கான போலி அட்டைகளை தயாரித்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் இந்த 13 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ குமார் தெரிவித்தார்.

போலி அட்டையை தயாரிப்பதற்கு இக்கும்பல் பயன்படுத்தியதாக நம்பப்படும் உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS