சட்டத்துறை தலைவர் பதில் அளிக்க வேண்டும்: துன் மகாதீர் கோரிக்கை

கோலாலம்பூர், நவ. 21-


தம்முடைய நீண்ட நாள் நண்பரான துன் டாய்ம் ஸைனுடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பில் சட்டத்துறை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி காலமான நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரான டாய்ம் ஸைனுதீன் மக்கள் பணத்தை திருடினாரா? என்ற கேள்விக்கு சட்டத்துறை தலைவர் டத்தோ முகமட் டுசுக்கி மொக்தாருரும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையருமான டான்ஸ்ரீ அஸாம் பாக்கியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.

சொத்துக்களை அறிவிக்கத் தவறியதாக கூறி, குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த டாய்மிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மீட்டுக்கொள்வதாக பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து 86 வயதான டாய்மை, வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

துன் டாய்ம்க்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீட்டுக்கொள்ளப்பட்டது மூலம் முன்பு அதிகாரத்தில் இருந்த தலைவர்களால் திருடப்பட்ட மக்கள் பணத்தை திரும்பப் பெறப்போவதாக கூறி மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் முயற்சி என்ன ஆனது என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

WATCH OUR LATEST NEWS