மழுங்கியப் பொருளை கொண்டு நெஞ்சில் தாக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், நவ. 21-


தனது தாயாரை கொன்று மூன்று ஆண்டுகளாக ஐஸ் பெட்டியில் வைத்திருந்ததாக கூறப்படும் 53 வயதுடைய நபர் கைது செய்யப்பபட்ட சம்பவத்தில், அந்த மூதாட்டி, மழுங்கியப் பொருளைக் கொண்டு நெஞ்சிப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்பது சவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த நவம்பர் 12 ஆம் தேதி பழைய கிள்ளான் சாலை, OUG கார்டனில் உள்ள இரண்டு மாடிகளைக்கொண்ட தரை வீடொன்றின் ஐஸ் பெட்டியில் மீட்கப்பட்டுள்ள 80 வயதுடைய அந்த மூதாட்டின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு சவப்பரிசோதனையின் முழுமையான அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா குறிப்பிட்டார்.

அந்த மூதாட்டியை கொல்வதற்கு மழுங்கியப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பூர்வாங்க அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அவர் விவரித்தார்.

அந்த மூதாட்டியின் சடலத்தை அவரின் கணவர், இன்று காலை 9 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து கோரிச் சென்றுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

போலீசாரின் புலன் விசாரணைக்கு உதவ அந்த மூதாட்டியின் கணவர் முன்வந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது தாயாரை கொன்று மூன்று ஆண்டுகளாக ஐஸ் பெட்டியில் வைத்திருந்த அவரின் மகன், இச்சம்பவத்தை இனி மறைக்கக்கூடாது என்பதற்காக தானே முன்வந்து போலீசுக்கு தகவல் கொடுத்ததுடன் சரண் அடைந்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS