கோலாலம்பூர், நவ. 29-
இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேல் மதிப்பு
கொண்ட நகைகளை நம்பிக்கை மோசடி செய்ததாக நகைக் கடை ஒன்றின் முன்னாள் விற்பனைப் பணியாளர் ஒருவருக்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
21 வயது ஏ.மித்ரா தானியா என்ற அந்த பணியாளர் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்கும், ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர்
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 264 ரிங்கிட் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் 14 ஆண்டு வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 408 வது பிரிவின் கீழ் மித்ரா தானியா மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை எதிர்த்து மித்ரா தனியா விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 40 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
வழக்கு விசாரணை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.