போலீஸ் அதிகாரிக்கும், அவரின் மனைவிக்கும் சிறை

கோலாலம்பூர், நவ. 29-


தனது வீட்டில் பணிபுரிந்த ஓர் இந்தோனேசிய பணிப்பெண்ணுக்கு சம்பளம் கொடுக்காமல், அவரை கட்டாயத் தொழிலாளராக கொத்தடிமையாக வைத்து, காயப்படுத்திய குற்றத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரிக்கும் அவரின் மனைவிக்கும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று சிறைத் தண்டனை விதித்து.

40 வயது எஸ்.. விஜயராவ் என்ற அந்த போலீஸ் அதிகாரிக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரின் 37 வயது மனைவி கே. ரினேஷினிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்ப கணவனும், மனைவியும் தவறிவிட்டதாக நீதிபதி சுல்கர்னேன் ஹசான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் சாட்சிப் பொருளாக காட்டப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் தடயவியல் கூறு மருத்துவ நிபுணர் டாக்டர் சியூ ஷேயு பெங் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்ததிலும் அந்த பணிப்பெண்ணின் உடலில் 20 இடங்களில் கடும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று நீதிபதி விளக்கினார்.

அந்த பணிப்பெண், கடந்த மூன்று ஆண்டு காலமாக மலேசியாவில் இருந்த போது அவர் அந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட்30 ஆம் தேதி கோம்பாக், தாமான் இண்டுஸ்ட்ரி போல்டனில் உள்ள தங்கள் வீட்டில் போலீஸ் அதிகாரி விஜயராவும், அவரின் மனைவி ரினேஷினியும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS