ஷா ஆலாம், நவ. 30-
சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள யுபிஎம். எனப்படும் மலேசிய புத்ரா பல்லைக்கழகத்தின் பெயரை மறுபடியும் மலேசிய விவசாயப் பல்லைக்கழகம் என்ற பெயருக்கு மாற்றுவதற்கு அனுமதியில்லை என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
மலேசிய புத்ரா பல்லைக்கழகத்தின் பெயரை மலேசிய விவசாயப் பல்லைக்கழகமாக மறுபடியும் மாற்றுவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள பரிந்துரை, அந்த பல்லைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் தம்மிடமோ அல்லது அப்பல்லைக்கழகத்தின் நிர்வாக வாரியத்திடமோ கொண்டு வரப்படவில்லை என்று சுல்தான் தெளிவுபடுத்தினார்.
60 ஆம் ஆண்டு பிற்பகுதியில் நாட்டின் விவசாய நடவடிக்கைகளின் மேன்மைக்காக விவசாய ஆய்வியலுக்கு திறக்கப்பட்ட UPM எனப்படும் விவசாயப் பல்கலைக்கழகம், நாடு தகவல், தொழில்நுட்பத்தை நோக்கி செல்வதை கருத்தில் பதித்து, அப்பல்லைக்கழகத்திற்கு மலேசிய புத்ரா பல்கலைக்கழகமாக பெயர் மாற்றப்பட்டது.
எனினும் நாட்டின் விவசாயத் தேவைகளை கருத்தில் கொண்டு புத்ரா பல்கலைக்கழகத்தின் பெயரை மீண்டும் விவசாயப் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றுவதற்கு முன்மொழியப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் முகமட் சாபு நேற்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.