கோலாலம்பூர், நவ. 30-
ஏழு மாநிலங்களில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணக்கை நேற்று இரவு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 505 பேராக இருந்தது ஏன்ற வெள்ளி பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.
திரெங்கானு மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் பத்தாயிரம் பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இத்துடன் திரெங்கானு மாநிலத்தில் மொத்தம் 35 ஆயிரத்து 124 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கிளந்தான் மாநிலத்திலும் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை நிலவரத்தின்படி 80 ஆயிரத்து 640 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர பெர்லிஸ், கெடா, நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா, பேரா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதாக அந்த மையம் அறிவித்துள்ளது.