கோத்தாபாரு, நவ. 30-
வெள்ளத்தால் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ள எஸ். பி. எம். தேர்வு எழுதும் மாணவர்கள், மாற்று எஸ். பி. எம் தேர்வு மையங்களில் தேர்வுக்கு அமரலாம் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மாணவரும் தேர்வைத் தவறவிடுவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மாணவர்கள் உட்பட அனைவருக்கும் திட்டமிட்டப்படி தேர்வு தொடரும் என்று அவர் கூறினார்.
அதேவேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவுவது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு, நாளை மறுநாள் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை நாடு தழுவிய நிலையில் 4 லட்சத்து இரண்டு ஆயிரத்து 956 மாணவர்கள் எழுதுகின்றனர்.