ஷா ஆலாம், நவ. 30-
நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலில் தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பகாங், பேராக், சிலாங்கூர் ஆகிய 3 மாநிலங்களை கைப்பற்றும் என்று அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா ஆகிய 4 மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான மாநில ஆட்சி நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் இந்த 4 மாநிலங்களின் எண்ணிக்கை, 7 மாநிலங்களாக அதிகரிக்கும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
தீபகற்ப மலேசியாவில் வட மாநிலங்களில் இரண்டை கைப்பற்றி விட்டோம். கிழக்கு கரை மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் வசம் உள்ளன.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அடுத்த இலக்கு பகாங், பேரா மற்றும் சிலாங்கூர் ஆகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
இன்று ஷா ஆலாம், ஐடிசிசி மாநாட்டு மையத்தில் பெர்சத்து கட்சியின் பொதுப் பேரவையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து கொள்கை உரை ஆற்றுகையில் முகைதீன் இதனை தெரிவித்தார்.
எனினும் மூன்று மாநிலங்களை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதையும் பெர்சத்து கட்சியின் தலைவரான முகைதீன் ஒப்புக்கெண்டார்