குறைந்த பட்ச சம்பளம், 1,700 ரிங்கிட் அதிகரிப்பு : தொழிலாளர்களின் நல்வாழ்விற்கு அரசாங்கத்தின் கடப்பாட்டை நிரூபிக்கிறது

நவ.30-

2025 ஆம் ஆண்டு பட்டிஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பள விகிதம், 1,500 ரிங்கிட்டிலிருந்து 1,700 ரிங்கிட்டாக அதிகரித்து இருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக வரவேற்பு பெற்று வருகிறது..

குறைந்த பட்ச சம்பள அதிகரிப்பு, மக்கள் மீது குறிப்பாக தொழிலாளர்கள் மீது அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையையும், கடப்பாட்டையும் நிரூபிப்பதாக இது உள்ளது என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.

குறைந்தபட்ச சம்பள உயர்வு என்பது மக்களின் வருமான அளவை அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் தொடர்புடைய முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதில் முற்போக்கான சம்பளக் கொள்கைகள் மற்றும் மக்கள் வருமான முன்முயற்சி (IPR) திட்டமும் அடங்கும்.

அடுத்த ஆண்டு தொடங்கும் கூடுதலான குறைந்தபட்ச சம்பள விகிதமானது, மக்களின் வருமானத் தளத்தில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விடக் குறையாமல் இருப்பதை உறுதிசெய்கிறது.

அதேவேளையில் மக்களின் வேலைத்தன்மை மற்றும் திறமைக்கு ஏற்றவாறு சம்பளம் மற்றும் ஊதியத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்பு வழங்கும் இதர முயற்சிகளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களில், குறைந்த வருமானத்தைக்கொண்டுள்ள வர்க்கத்தினரின் நல்வாழ்வை உறுதி செய்வதாக இது உள்ளது என்பதை தாராளமாக நம்பலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பணவீக்க விகிதம் உயர்வு, உலகளாவிய பொருளாதார அழுத்தங்களினால் மக்களின் வாழ்க்கைச் செலவினம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் குறைந்த பட்ச சம்பள விகித உயர்வு, 1,700 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டு இருப்பது, தொழிலாளர்களின் நிதிச் சுமையை குறைக்கக்கூடும் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய மேம்பாட்டில் எந்தவொரு தொழிலாளரும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு நேர்மையாக, நியாயமாக நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்ததர பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டிற்கு ஏற்ப இந்த சம்பள உயர்வு அமைந்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தல் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார், 1,700 ரிங்கிட் குறைந்தப் பட்ச சம்பள விகிதம், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

அதேவேளையில் ஐந்து தொழிலாளர்களுக்கும் குறைவான ஆள்பலத்தை கொண்டுள்ள நிறுவனங்கள் மற்றும் முதலாளிமார்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு இந்த குறைந்தப் பட்ச சம்பளத்திட்ட அமலாக்கத்தை வரும் ஆகஸ்ட் முதல் தேதி அமல்படுத்துவதற்கு ஏதுவாக ஆறு மாத கால அவகாசத்தை பிரதமர் வழங்கியுள்ளார்.

சகிலா தேவி – சுங்காய், பேரா

இந்த குறைந்த பட்ச ஊதிய உயர்வால் மக்களின் வாங்கும் சக்தி சற்று அதிகரிக்கும் என்கிறார் பேரா, சுங்காய் வட்டாரத்தைச் சேர்ந்த சகிலா தேவி.

அதிகரிக்கப்படும் வருமானத்தால், மக்கள் பொருட்கள் வாங்குவதிலும் சேவைகளைப் பெறுவதிலும் அதிக செலவு செய்ய வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, அவ்வப்போது ஏற்படுத்தப்படும் மடானி மலிவு விற்பனையில் மக்கள் தாராளமாக அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களை வாங்க முடியும். இதனால், நாட்டின் சிறு, குறு, நடுத்தர பொருளாதாரத்தைத் தூண்டுவதோடு தொழில் துறைகளை வளர்ச்சியால் வேலை வாய்ப்பையும் உருவாக்கும் சாத்தியம் உள்ளது என்றார் சகிலா தேவி.

மேலும், அடிப்படை ஊதிய உயர்வால் சொத்துடைமை வாங்கும் ஆற்றல் அதிகரிக்கும். சில வங்கிகளில் சொத்துடைமை வாங்குவதற்காக, கடன் பெறும் தகுதி நிலையைப் பலர் எட்டக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரக்கூடிய சாத்தியம் இருப்பதாக சகிலா தேவி தெரிவித்தார்.

ரேவதி குமாரு – ஜோகூர் பாரு

வாழ்க்கைச் செலவினம் பன்மடங்கு அதிகரித்துள்ள சூழலில், இந்த அடிப்படை ஊதிய உயர்வு ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்கு உதவக்கூடிய அளவில் இருக்கும் எனக் குறிப்பிடுகிறார் ஜோகூர் பாருவைச் சேர்ந்த ரேவதி குமாரு.

இதனால், குறைந்த வருமானம் உள்ள தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் தங்களின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக மேம்படுத்தும் ஒரு வழியாக அமைந்திடும் என்றார்.

எடுத்துக் காட்டாக, சுகாதாரம், கல்வி, பிற அத்தியாவசிய பொருட்கள் போன்ற செலவினங்கள் அதிகரிப்பால், அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வானது சிறந்த அணுகலை வழங்கும் எனக் குறிப்பிட்டார். ஆனால், நடப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் ஊதிய உயர்வு, இன்னும் சற்று அதிகமாக இருந்தால், மேலும் பலருக்கு நல்லதொரு மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைக் கொடுக்க வழிவகை செய்யும் என அவர் மேலும் சொன்னார்.

தவிர, இந்த குறைந்தப் பட்ச சம்பள உயர்வு, தொழிலாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதுடன் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும்

தொழிலாளர்கள் தங்களின் அன்றாட சவால்களுக்கு மத்தியில் அவர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் இந்த குறைந்தப் பட்ச சம்பள உயர்வு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று ரேவதி குமாரு குறிப்பிடுகிறார்.

காளிஸ், பத்துமலை, சிலாங்கூர்

தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் அவர்களிடையே கூடுதல் உத்வேகத்தையும் அதிகரிக்கக் கூடும் என்கிறார் பத்துமலையைச் சேர்ந்த காளிஸ்.

இந்த ஊதிய உயர்வால் தாங்கள் மதிக்கப்படுவதாய் அவர்கள் உணர்வார்கள். அதிகரித்துள்ள அன்றாடச் செலவைச் சமாளிக்க வழக்கமாகக் கொடுக்கப்படும் அலவன்ஸ்கள் நீக்கப்படாமல், இந்த நியாயமான ஊதியம் அதிகரிப்பு என்பது தொழிலாளர்களிடையே அதிக மன உறுதியையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும் என காளிஸ் தெரிவித்தார்.

மேலும், நிறுவனங்களின் கோணத்தில் பார்க்கும்போது, திறமையானவர்களை ஈர்க்கவும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்வும் இந்த ஊதிய உயர்வு முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். தற்போது வேலை செய்யும் இடத்தில் ஊதியம் குறைவாக இருப்பதாக தொழிலாளர்கள் உணரும் தருணத்தில், வேறு நிறுவனத்தில் அதிக ஊதியம் கிடைக்கவே, அடிக்கடி வேலையை மாற்றிக் கொள்ளும் நிலை குறையும்.

ஆக, நீண்ட நாள் ஊழியர்கள் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாகவும், அதிக திறமைக் கொண்டவர்களாகவும் இருப்பர்கள். இதனால், வேலை செய்யும் சூழலும் சிறப்பாக அமையும் என்றார் அவர்.

மேலும் அரசாங்கத்தின் நோக்கத்தையும், எதிர்பார்ப்பபையும் உணர்ந்து, தொழிலாளர்களின் குறைந்தப் பட்ச சம்பளத்தை 1,700 ரிங்கிட்டாக உயர்த்துவது நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளின் முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று காளிஸ் வலியுறுத்துகிறார்.

குறைந்தப்பட்ச சம்பள உயர்வில் எந்தவொரு தொழிலாளரும் சுரண்டப்பட்டு விடக்கூடாது. வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள ஒரு வெகுமதியாக இந்த குறைந்த பட்ச சம்பள உயர்வு கருதப்படுகிறது..

காரணம், அந்த குறைந்த பட்ச சம்பள உயர்வானது, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி நாட்டின் சிறு,குறு, நடுத்தர பொருளாதார வளர்ச்சியையும் சிறக்க வைக்க முடியும்.

தவிர இந்த சம்பள உயர்வு, மறைமுகமாக மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்யும் என்பதுடன் ஓர் ஒட்டுமொத்த அளவில் நாட்டின் சிறு,குறு, நடுத்தர பொருளாதாரத்திற்கும் பெரிதும் உதவும்.

மிகப்பெரிய அளவில் உள்ளூரில் செலவிடப்படும் தொகையானது, உள்ளூர் வியாபாரிகளின் வர்த்தகங்களுக்கு பெரும் உந்தும் சக்தியாக இருப்பதுடன் பெரியளவில் உள்ளடக்கப்பட்ட சிறு,குறு, நடுத்தர பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலாக, இந்த குறைந்த பட்ச சம்பள உயர்வு, உள்ளூர் தொழிலாளர்கள் ஆர்வப்படாத வேலைகளில் அவர்கள் இணைவதற்கான சூழலையும் ஏற்படுத்தும். இது அந்நியத் தொழிலாளர்களை முதலாளிமார்கள் சார்ந்து இருக்கும் போக்கை குறைக்கக்கூடும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

WATCH OUR LATEST NEWS