டிசம்பர் – 01
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் உட்பட அனைத்து எஸ்.பி.எம். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படுவார்கள் என்று மலேசிய கல்வி அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
இது குறித்து தகவல் அளித்த கல்வி அமைச்சர் Fadhlina Sidek கூறுகையில், கிளாந்தான் மாநிலக் கல்வித் திணைக்கள உதவியுடன் எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களின் தரவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டன எனவும் இது விரைவில் கையாளப்படும் என்றும் உறுதியளிப்பதாக அவர் கூறினார்.
மாணவர்களை இடம் மாற்றுவதற்கான பணி மாநில கல்வித் திணைக்களத்தாருடனும் பாதுகாப்புப் படையினருடனும் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. வெள்ளப் பாதிப்புக்குள்ளான எஸ்.பி.எம். மாணவர்கள் பள்ளி சீருடை அணிய வேண்டிய அவசியமில்லை என்றும், நாளை தொடங்கும் தேர்வுக்கு ஏற்றவாறு பொருத்தமான ஆடைகளை அணியலாம் என்றும் அவர் கூறினார்.
வெள்ள பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மாநில கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்யும். அவர்கள் தங்க வைக்கப்படும் மாணவ விடுதியில் எழுதுபொருள், ஆடை, பிற பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் விடுதியில் தங்கி படிக்கவும், மீள்பார்வை செய்யவும் வசதியாக இருக்கும் என்று Fadhlina Sidek மேலும் கூறினார்.