“Ops Kesan 3.0” என்ற புதிய நடவடிக்கையை இன்று முதல் தொடங்கியுள்ளது

டிசம்பர் – 01

அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்ப, பொருட்களின் விலையை கண்காணிக்க “Ops Kesan 3.0” என்ற புதிய நடவடிக்கையை இன்று முதல் தொடங்கியுள்ளது KPDN எனப்படும் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு.

இது குறித்து ஒஏசிய அதன் அமைச்சர் Datuk Armizan Mohd Ali கூறுகையில், இந்த நடவடிக்கையின் மூலம், பொருட்களின் விலை உயர்வையும் கள்ளச்சந்தை நடவடிக்கைகளையும் தடுக்க முடியும் என்று கூறினார். இதற்காக, அக்டோபர் 1 முதல் பொருட்களின் விலை குறித்த தரவுகளைத் தமது தரப்பு சேகரித்து வருவதாகவும், இந்த தரவுகளை சம்பள உயர்வுக்கு முன்னும் பின்னும் உள்ள விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தொடர்புடைய அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதுடன், பொது மக்களின் பங்களிப்பையும் வரவேற்பதாக கூறிய அவர், விலை, கட்டணம் பொருட்களின் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார்களை தெரிவிக்க புலனம், இணையதளம், அழைப்பு மையம் போன்ற பல்வேறு வழிகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

Ops Kesan 3.0 நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் 2,803 கடைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், விலை உயர்வு செய்த கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் Armizan தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS