மாரா விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்துவீர்

கோலாலம்பூர், டிச.2-


சீனர்களின் கல்வி உட்பட அவர்களின் சமூகவியல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அமைக்கப்பட்டுள்ள டோங் ஜோங் ZONG போன்ற ஒரு தலையாய அமைப்பு, மலாய்க்கார பூமிபுத்ராக்களுக்கு நிறுவுவதற்கு பதிலாக பூமிபுத்ரா சமூகத்தின் கல்வி, வணிகம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் நடைமுறைகளை எளிதாக்குவதற்கு மாரா மேற்கொண்ட முயற்சிகளில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய பெர்சத்து கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாரா உட்பட பல்வேறு அரசாங்க கொள்கைகள் மற்றும் நிறுவனங்ளின் செயல்பாடுகள் ஏற்கனவே பூமிபுத்ராக்களுக்கு ஆதரவாகவும், அனுகூலமாகவும் உள்ளன என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் வலிமைமிகுந்த இத்தகைய ஆதரவுகள் மத்தியில் மலாய்கார பூமிபுத்ராக்களுக்கென்று பிரத்தியேகமான ஒரு தலையாய அமைப்பு நிறுவுவது என்பது தேவையற்றதாகும் என்று லிம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைகள் மற்றும் சலுகைகளில் எந்த விவகாரம் இன்னும் நிறைவேற்றப்பாடமல் இருக்கிறது என்பதை முன்னாள் பிரதமரான முகைதீன் விளக்க வேண்டும் என்று லிம் கேட்டுக்கொண்டார்.

உண்மையிலேயே அரசாங்கம் வழங்கி வரும் சலுகைகளில் ஏதாவது பிரச்னைகள் இருக்குமானால் பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முகைதீன், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டுமே தவிர தனது பெர்சத்து கட்சி மாநாட்டில் அல்ல என்பதையும் லிம் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS