கோலாலம்பூர், டிச.16-
தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சு தெக்கூன் நேஷனல் நாஷனல் மூலம் 9,412 இந்திய தொழில்முனைவோருக்கு 204.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறுகையில், இந்த நிதி 2019 முதல் நவம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டமான SPUMI மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
இதில், 1,877 தொழில்முனைவோர் அல்லது 20 விழுக்காட்டினர் தெக்கூன் நேஷனலுக்கு கடன் திருப்பிச் செலுத்தத் தவறியதால் கடன் தகவல் அமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
கடன் திருப்பிச் செலுத்துவதில இருக்கும் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தெக்கூன் நேஷனல் மூலமாக கடன் , நிதி மேலாண்மை ஆலோசனை நிறுவனமான (AKPK உடன் இணைந்து நிதி கல்வி திட்டங்களையும் நடத்துகிவதாக அவர் இன்று மேலவையில் கூறினார்.
SPUMI கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள், கருப்புப் பட்டியலிடப்பட்டவர்கள், கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கைகள் ஆகியன குறித்து குறித்த செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரனின் கேள்விக்கு இரமணன் இவ்வாறு பதிலளித்தார்.
அதேசமயம், தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் தவறாமல் கடனைத் திரும்பச் செலுத்துவோருக்கு அமைச்சு கூடுதல் கடன் வழங்கும் என்றும் ரமணன் கூறினார்.
கடன் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்குரிய முறையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.
தாம் முன்பு கூறியதைப்போல குறைந்த பட்ச கட்டணமாக 30 ரிங்கிட் செலுத்துவதற்கும், அவர்களுக்கு விருப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால், அவர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது என்பது இயலாத காரியாமாகும். காரணம், எதிர்காலத்தில் தங்கள் விபாபாரத்தை விரிவுப்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பின்றி, கடன் கேட்டு வருகின்றவர்களுக்கும், அந்தப் பணத்தை கடனாக கொடுத்து உதவுவதற்கு பயன்பட வேண்டியுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் விளக்கினார்.