422 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்களுக்கு 46.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், டிச.16-

இவ்வாண்டு அக்டோபர் 30 ஆம் தேதி வரை நாட்டில் 422 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்களுக்கு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு மொத்தம் 46.1 மில்லியன் அல்லது 4 கோடியே 61 லட்சம் ரிங்கிட்டை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற மேலவையில் தெரிவிக்கப்பட்டது.

மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த Nga Kor Ming தலைமையிலான வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, அரசாங்க மானிய நிதி உதவிக்கேட்டு விண்ணப்பித்த மொத்தம் 1,074 ஆலயங்களில் 422 ஆலயங்களின் விண்ணப்பங்கள் ஆங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நிதி உதவிப்பெற்ற இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்களில் 147 வழிபாட்டுத்தளங்கள், இந்து ஆலயங்களாகும். அவற்றுக்கு மொத்தம் 19.1 மில்லியன் அல்லது ஒரு கோடியே 91 லட்சம் வெள்ளி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று டாக்டர் லிங்கேஸ்வரனின் கேள்விக்கு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்..

சிலாங்கூர் மற்றும் பேரா மாநிலங்களில் அதிகமான ஆலயங்கள் மானியம் பெற்றுள்ளன. சிலாங்கூரில் 32 ஆலயங்களும், பேராவில் 32 ஆலயங்களும் மானியம் பெற்றுள்ளதாக ங்கா கோர் மிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று ஜோகூரில் 19 ஆலயங்களும், கெடாவில் 12 ஆலயங்களும், கிளந்தானில் 2 ஆலயங்களும், மலாக்காவில் 15 ஆலயங்களும், நெகிரி செம்பிலானில் 14 ஆலயங்களும் பகாங்கில் 8 ஆலயங்களும், புத்ராஜெயாவில் ஓர் ஆலயமும், சபாவில் 3 ஆலயங்களும் கோலாலம்பூரில் 5 ஆலயங்களும் மானியம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர், கோத்தா திங்கி, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம்,/ ஜோகூர், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், / பேரா, பகான் செராய், சூன் லீ பெர்டானா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், / பேரா, பத்துகாஜா, சைவ பரிபாலன சங்கம், / பேரா, தஞ்சோங் ரம்புத்தான் அருள்மிகு சமயப்புர மகா மாரியம்மன் ஆலயம், / சபா, ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பரிபாலன சபா, / புத்ராஜெயா, தேவி ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம், / சிலாங்கூர், ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயம், / சிலாங்கூர், ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடா மகாமாரியம்மன் ஆலயம், /சிலாங்கூர், கெப்போங், டேசா ஜெயா, திருமுருகன் ஆலயம் / ஆகியவை அதிக தொகையாக தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை மானியமாக பெற்றுள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மடானி அரசாங்கத்தின் கீழ் இஸ்லாம் அல்லாத அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் உயரிய கவனிப்பும், முன்னுரிமையும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு வழங்கி வருகிறது என்பதற்கு இந்த நிதி ஒதுக்கீடு ஓர் உதாரணமாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரனின் கேள்விக்கு அமைச்சர் ங்கா கோர் மிங் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS