சட்டவிரோதக்குடியேறிகளுக்கான பொது மன்னிப்புத்திட்டம், முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ளன

புத்ராஜெயா, டிச. 16-


மலேசியாவில் தங்கியுள்ள சட்டவிரோதக்குடியேறிகள், எவ்வித சட்ட நடவடிக்கைக்கும் உட்படாமல், வெறும் அபராதத் தொகையை மட்டும் செலுத்திவிட்டு தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கு குடிநுழைவுத்துறை வழங்கிய பொது மன்னிப்புத்திட்டம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கடைசி நேரத்தில் அதிகமான சட்டவிரோதக்குடியேறிகள், குடிநுழைவு அலுவலகங்களிலும், விமான நிலையங்களிலும் திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு குடிநுழைவுத்துறை அமல்படுத்தியுள்ள பொது மன்னிப்புக்குரிய திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்கும், அபராதத் தொகையை செலுத்துவதற்கும் நாடு முழுவதும் உள்ள குடிநுழைவு அலுவலகங்கள் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 28 ஆம் தேதி ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தினங்களில் சட்டவிரோதக்குடியேறிகளின் நான்காயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபன் அறிவித்துள்ளார்.

நாடு திரும்புவதற்கும், சட்டப்பூர்வத் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கும் இதுவரையில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 471 பேர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 107 பேர் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS