கோலாலம்பூர், டிச. 17-
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் யாப் குவான் செங்கில் உள்ள ஒரு கேளிக்கை மையம் ஒன்றுக்கு வெளியே இந்திய இளைஞர்கள் சம்பந்தப்பட்ட சண்டை தொடர்பில் போலீசார் ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
நண்பர்களுக்கு இடையிலான இந்த சண்டையில் ஒருவர் பேனாக்கத்தியை பயன்படுத்தி, தாக்குதலில் ஈடுபட்டதால் மூவர் காயம் அடைந்தனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுலிஸ்மி அப்பெண்டி சுலைமான் தெரிவித்தார்.
முதலாவது நபருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நபருக்கு முகத்திலும், புருவத்திலும், உதட்டிலும் காயம் ஏற்பட்டுள்ள வேளையில் மூன்றாவது நபருக்கு தலையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டு பத்து தையல்கள் போடப்பட்டுள்ளதாக சுலிஸ்மி அப்பெண்டி குறிப்பிட்டார்.
மூவரும் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறு, பின்னர் அந்த நைட் கிளப்பின் வெளி வளாகம் வரை நீடித்து கைகலப்பில் முடிந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 22 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட பேனாக் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஐவரும் குற்றவியல் சட்டம் 236 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுலிஸ்மி அப்பெண்டி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.