கோலாலம்பூர், டிச. 17-
தங்கள் முன் தோன்றியுள்ள ஒரு பொது எதிரியை எதிர்கொள்வதற்கும், மலேசியாவில் மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை காப்பாற்றுவதற்கும் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து ஓர் உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் அறிவிப்பு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் தன்னை முதுகில் குத்தி விட்டார்கள் என்று கூறி, துன் மகாதீர் யாரை குற்றஞ்சாட்டினாரோ அவர்களை எல்லாம், இன்று தன்னுடன் இணைத்துக்கொண்டு மலாய்க்காரர்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போவதாக அறிவித்துள்ள துன் மகாதீர், மக்களிடையே கருத்துவேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் விதைத்து, தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இது உண்மையிலேயே ஓர் அபாய செயலாகும் என்று அகாடமி நுசந்தராவைச் சேர்ந்த ஆய்வாளர அஸ்மி ஹசான் கூறுகிறார்.
துன் மகாதீரின் இந்த முயற்சி, மலாய்க்காரர்கள், மலாய்க்காரர் அல்லாதவர்கள் இடையே பெரியளவிலான விளைவையும், தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்று அந்த ஆய்வாளர் எச்சரிக்கிறார்..
எனினும் மகாதீரின் இந்த அறைகூவல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், கவலைப்டுவதற்கு ஒன்றுமில்லை என்று மலேசிய அனைத்துலக பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் சியாஸா சுக்ரி கூறுகிறார்.
கடந்த ஆண்டு பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற துன் மகாதீர் முயற்சி செய்ததை அந்த பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
தற்போது அரசியலிருந்து தாம் ஒதுக்கப்பட்டு விட்டதாக உணரும் துன் மகாதீர், அவ்வப்போது, மலாய்க்கார்கள் உரிமை குறித்து பேசி, மலாய்த் தலைவர்களுடன் மீண்டும் ஒட்டிக்கொள்வதற்கு கையாண்டு வரும் யுக்தியே இந்த மிரட்டல் என்று டாக்டர் சியாஸா சுக்ரி குறிப்பிடுகிறார்.